
இந்து கோவில்களை முழுமையாக சட்டவிரோதமாக அழித்துவிடும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறுகையில்,
அறநிலையத்துறை அமைச்சர்,ஆணையர் ஆகியோர் அறங்காவலர் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உண்மைத் தன்மை இல்லை என்றும் இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

நீதிமன்ற தீர்ப்பின் படி, பாரம்பரிய கோவில்களில் அறங்காவலருக்கு தான் முன்னுரிமை, எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது என கூறிய அவர், இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக சேகரிக்கப்படும் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என கூறினார்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறையில் பக்திமானாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மாறாக கோவில்களில் இருக்கும் நிதியை சுரண்டும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.
கோவில்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மக்களை ஒன்றிணைத்து தான் போராட வேண்டிய நிலை உள்ளது என கூறிய அவர்,
நான் முதல்வர் ஸ்டாலினுக்கு விரோதமானவன் அல்ல ஆனால் அவருடைய தலைமையில் செயல்பட்டு வரும் இந்துக்களுக்கு எதிராக செயபட்டு வரும் அரசிற்கு எதிராக தான் குரல் கொடுத்து வருகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நோயால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்து கோவில்கள் இந்துக்களிடமே வழங்கப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.