தேனியில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் கடை ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு நிலை, சிறப்பு நிலை மாநிலம் முழுவதும் நிலுவைத்தொகை உடன் வழங்க வேண்டும். தமிழ்நாடு பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கிவிட்டுத்தான் புதிய ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுக்கு பதிலாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். கூட்டுறவு துறையின் கீழ் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி அரசு பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொன் .அமைதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுராம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் வரவேற்றுப் பேசினார். மாவட்ட சிறப்பு தலைவர்கள் பன்னீர்செல்வம் ,அழகர்சாமி, சிவன் பிள்ளை, ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் முழுவதிலும் இருந்து ஏராளமான நியாய விலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.