சேலம் மாவட்டம் காரிப்பட்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 120 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்பட்ட இந்த வீட்டுமனை இதுவரையில் அவர்களுக்கு சொந்தமாக பிரித்துக் கொடுக்காததால் வீடுகளை கட்ட முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் பொதுமக்கள் வீடு இல்லாமல் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முறையாக தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனி மனுக்களை கொண்டு வந்து தங்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கான இடத்தை உடனே ஒதுக்கித் தரவேண்டும் இடம் ஒதுக்கப் படாததால் வீடு கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் வழங்கப் பட்ட வீட்டு மனையை உடனடியாக தங்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென பொதுமக்கள் முட்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது