சென்னையில் கனமழை காரணமாக விமான நிலையத்திற்குள் இருக்கும் பயணிகள் வாடகை காரோ, ஆட்டோவோ கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், மாநகர பேருந்துகள் விமானநிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி வருவது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் தங்களுடைய இருப்பிடங்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அப்படியே வாடகைக் கார்கள் கிடைத்தாலும், மழையை காரணம் காட்டி அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், மக்கள் வசதிற்காக தமிழக அரசு விமான நிலையத்திற்கு உள்ளேயே அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில், மாநகர பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள் உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதி, சர்வதேச விமான நிலைய வருகை பகுதி ஆகிய இடங்களுக்குள் வந்து, விமானப் பயணிகளை ஏற்றி செல்கின்றன.
குறிப்பாக கிளாம்பாக்கம், கோயம்பேடு, சென்னை பாரிமுனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மாநகர பேருந்துகள் அவ்வப்போது சென்னை விமான நிலையத்திற்குள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
வழக்கமாக சென்னை விமான நிலையத்திற்கு வெளிப்பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் சாதாரண மாநகர பேருந்துகளை, விமான நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநகர பேருந்துகள் மழை பெய்து முடியும் வரை விமான நிலையத்திற்குள் வந்து செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
