காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 203வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் 203வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. முன்னதாக கண்ணாடிகளாலான அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், பல்லாக்கு உள்ளிட்ட ஊர்திகளில் கொடிகள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்பு இரவு மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா வந்ததடைந்தது. இதனை தொடர்ந்து 130அடி உயர கொடிமரம் உள்ளிட்ட 4 மினாராக்களில் கொடியேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேலும் பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் போலீசார் ஈடுபட்டனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வரும் 07ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது.






