• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தச்சம்பத்து கிராமத்தில் பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு..,

ByKalamegam Viswanathan

Aug 7, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகே பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியானது தேனுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால் திருவேடகம் ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் இந்த குப்பைகளை அப்புறப்படுத்த மறுப்பதாகவும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரமுள்ள தேனூர் ஊராட்சியில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வருவதற்கு மறுப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இங்கு கழிப்பறை வசதி இல்லை என பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்த நிலையில் அப்போது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள இந்த சுகாதார வளாகத்தின் முன்பு அடிக்கடி இந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் மழைக் காலங்களில் வளாகம் முன்பு மழை நீரும் தேங்கி சேரும் சகதியமாக மாறிவிடுகிறது இதன் காரணமாகவும் குப்பைகள் அதிக அளவில் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதன் காரணமாக கழிப்பறை பயன்படுத்துபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் இந்த பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு குப்பையில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். அருகிலேயே திருவேடகம் ஊராட்சி அலுவலகம் உள்ள நிலையில் அங்குள்ள பணியாளர்களை குப்பைகளை அகற்ற அகற்றுவதற்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் தச்சம்பத்து கிராமத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதி திருவேடகம் ஊராட்சியிலும் மற்றொரு பகுதி தேனூர் ஊராட்சியில் வருவதால் அடிக்கடி இது போன்ற பிரச்சனை ஏற்படுவதாக கூறுகின்றனர். ஆகையால் தச்சம்பத்து கிராமம் முழுவதையும் திருவேடகம் ஊராட்சியில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் யூனியன் அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.