• Fri. Apr 26th, 2024

மனித மூளையை மதுவால் மழுங்கடிப்பதா?- குமுறும் காந்தியவாதிகள்.. கண்டுகொள்வாரா ஸ்டாலின்!

By

Sep 2, 2021 ,

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்த போது மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த கட்சி இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக. ஆனால் ஆளும் கட்சியான பின் திமுகவின் நிலைப்பாடு மாறி விட்டது. மனித மூளையை திமுக அரசும் மதுபானத்தால் மழுங்கடித்து வருகிறது என்று குமுறுகின்றனர் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடும் காந்திய சிந்தனையாளர்கள். இதற்காக வாழும் காந்தியவாதி நல்லகண்ணு வீட்டிற்கே சென்று ஆலோசனையும் நடத்தி வந்திருக்கிறார்கள் நெல்லையை சேர்ந்த காந்தியவாதிகள் திருமாறன் மற்றும் ராம் மோகன் போன்றோர்.

இது குறித்து காந்தியவாதிகள் திருமாறன் மற்றும் ராம் மோகன் இருவரிடமும் பேசினோம்.. தமிழகத்தில் பீஹார், குஜராத் போல பூரண மதுவிலக்கு வேண்டும் என்று நாங்கள் கடந்த 30 வருடங்களாக போராடி வருகிறோம். மதுக்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் வெளியீடு என பல் வேறு கோணங்களில் எமது போராட்டங்கள் தொடர்கின்றன. பெண்களை திரட்டி கூட பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இது தவிர அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுப்பது, அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்று பல்வேறு எமது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்திக் கொண்டே வருகிறோம். பூரண மதுவிலக்குக்காக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்கார், தெலுங்கானா கவர்னர் தமிழிசை என்று பல்வேறு அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனாலும் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்தப் பலனும் கிடைக்க வில்லை.

எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிடம் ஆலோசனை நடத்தினோம். பூரண மதுவிலக்கிற்கு முதல் கட்டமாக நமது சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் வாழ்ந்த ஊர்களில் மட்டுமாவது மதுக்கடைகள் மூட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறித்து விவாதித்தோம். மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரம், கப்பலோட்டிய தமிழர் வஉசி பிறந்த ஓட்டப்பிடாரம், வாஞ்சிநாதன் தன் உயிரை மாய்த்துக்கொண்ட மணியாச்சி, கொடிகாத்த குமரன் பிறந்த திருப்பூர், சுப்பிரமணியசிவா பிறந்த வத்தலக்குண்டு, காமராஜர் பிறந்த விருதுநகர், கக்கன் பிறந்த மேலூர், தியாகி கரையாளர் பிறந்த செங்கோட்டை மற்றும் வரலாற்றில் இடம் பெற்ற ஜீவா, இரட்டைமலை சீனிவாசன், சத்தியமூர்த்தி, ராஜாஜி, ஜெ சி குமரப்பா, தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்கள் பிறந்த ஊர்களிலும் மதுக்கடைகளை மூட வேண்டும்.

நமது மண்ணின் சுதந்திரத்துக்காக போராடிய பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள் பிறந்த ஊர்களிலும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். இது தவிர வாழும் தியாகிகள் லட்சுமி காந்தன் பாரதி ஐ ஏ எஸ், கம்யூனிஸ்ட்டு தலைவர் நல்லகண்ணு பிறந்த ஊர்களிலும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம். தமிழக முதல்வர் விரைவில் தமிழக மக்களுக்கு இதை திமுக ஆட்சியின் பரிசாக வழங்க வேண்டுகிறோம் என்றனர்.

காந்தியவாதிகள் கோரிக்கைகள் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிடம் பேசினோம்.., இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது. தமிழக அரசோ வருமானம் பாதிக்கப்படும் என்று காரணம் சொல்கிறது. இது ஏற்புடையதல்ல. முதல்கட்டமாக காந்தியவாதிகள் கோரிக்கைப்படி படிப்படியாக குறைந்தபட்சம் தியாகிகள் பிறந்த இடங்களிலும் பிறகு படிப்படியாக பூரண மதுவிலக்கும் அமல் செய்யப்பட வேண்டும் என்றார்.

தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஐ ஏ எஸ் நம்மிடம் பேசினார், தியாகிகள் பிறந்த இடங்களில் முதல் கட்டமாகவும் பின்னர் படிப்படியாக பூரண மதுவிலக்கும் அமல் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதை முதல்வர் செய்து தந்தால் தமிழக மக்கள் அவரை நிரந்தர முதல்வர் ஆக்குவது உறுதி என்றார்.

மனித மூளையை மதுபானத்தால் மழுங்கடிக்க கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் காந்தியவாதிகளின் கோரிக்கை நியாயமானது தான். தியாகிகள் பிறந்த நாட்களில் அவர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்வதை விட்டு விட்டு அவர்கள் வாழ்ந்த மண்ணில் மதுவில்லா நிலையை தமிழக முதல்வர் உருவாக்கினால் அவரது செல்வாக்கு உயருவது உறுதி. இதை கண்டு கொள்வாரா ஸ்டாலின் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *