• Sat. Apr 27th, 2024

‘காந்தி ஹிந்து… கோட்சே ஹிந்துத்வவாதி..’ – ராகுல் காந்தி

Byமதி

Dec 12, 2021

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலர் பிரியங்கா காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, இந்திய அரசியலில், இன்று ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதி என்ற போட்டி உள்ளது. நான் ஹிந்து. ஆனால், ஹிந்துத்வவாதி இல்லை. மஹாத்மா காந்தி ஹிந்து, கோட்சே ஹிந்துத்வவாதி.

ஹிந்துத்வவாதிகள், தங்களது வாழ்க்கை முழுவதும் அதிகாரத்தை தேடுவதிலேயே குறியாக உள்ளனர். அவர்களுக்கு அதிகாரத்தை தவிர வேறு ஒன்றும் தேவையில்லை. அவர்கள் தான் கடந்த 2014 முதல் அதிகாரத்தில் உள்ளனர். அவர்களை நாம், அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட்டு ஹிந்துக்களை அமர வைக்க வேண்டும். இந்தியா ஹிந்துக்களின் நாடு. ஹிந்து என்பவர் அனைவரையும் அரவணைத்து, யாருக்கும் பயப்படாமல், அனைத்து மதங்களையும் மதித்து யார் நடக்கிறாரோ அவரே ஹிந்து என்றார்.

பிரியங்கா காந்தி பேசும்போது, நாட்டில், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்டமைத்த அனைத்தையும் தனது தொழிலதிபர்களிடம் விற்க பா.ஜ., முயற்சி செய்கிறது. தேர்தல் வரும் காலங்களில் பா.ஜ., தலைவர்கள் சீனா பற்றியோ , மற்ற நாடுகளை பற்றியோ, ஜாதி குறித்து பேசுவார்கள். ஆனால், மக்களின் பிரச்னைகளை பற்றி பேச மாட்டார்கள். கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி அரசு என்ன செய்துள்ளது. மத்திய அரசு, மக்கள், விவசாயிகளின் நலனுக்காக உழைக்கவில்லை. மாறாக, குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்தது என்ன என மோடி அரசு தொடர்ச்சியாக கேள்வி எழுப்புகிறது. இந்த 70 ஆண்டுகளை விட்டு, கடந்த 7 ஆண்டுகளில் என்ன செய்துள்ளீர்கள் என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *