சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் செலவை உரிமையாளரிடம் வசூல் செய்து நெருஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் புகார் அளித்ததன் பேரில் நெடுஞ்சாலை துறையினர் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27ஆம் தேதி சோழவந்தானின் முக்கிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த நிலையில், அதன் பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றிய பகுதிகளில் ஒரு சிலர் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் தொடர் புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதனை அடுத்து பேரூராட்சி அதிகாரிகள் சோழவந்தான் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதில் சோழவந்தானில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் தொடர் ஆக்கிரமிப்பில் ஈடுபடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் வியாபாரிகளும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதற்கு வியாபாரிகளும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது..,

ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகும் ஒரு சில தொடர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக நெடுஞ்சாலை துறையினருக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது. ஆகையால் இனிமேலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் செலவுகளை சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தின் உரிமையாளரிடம் வசூல் செய்து நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்க சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
