தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்த செய்திகளும் புகைப்படங்களுமே சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கின்றன. திமுகவினரும் அதன் அனுதாபிகளும் துபாயில் அரபிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் ஷூட் அணிந்து வரும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து சிலாகித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் வெளிநாட்டு பயணத்தின்போது கோட் ஷூட் அணிந்து செல்வது முதல்முறை அல்ல. முன்னாள் முதலமைச்சர்கள் சி.ராஜகோபாலசாரி மற்றும் காமராஜர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது தாங்கள் தமிழ்நாட்டில் என்ன ஆடை அணிந்தார்களோ அதே ஆடையைதான் வெளிநாடுகளிலும் அணிந்து சென்றார்கள்.
ஆனால், இந்த வழக்கத்தை மாற்றியவர் அறிஞர் அண்ணா. சுதந்திர இந்தியாவில் மாநிலக் கட்சியின் முதல் முதலமைச்சராக பொறுப்பேற்று முன்மாதிரியாக விளங்கியவர் அண்ணாதான். இந்த கோட் ஷூட்டுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். கடந்த 1968 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அறிஞர் அண்ணா கோட் ஷூட் மற்றும் டை அணிந்து சென்றார்.
அதேபோல் 1970 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற மூன்றாவது உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்க அண்ணா வழியில் கோட் ஷூட் அணிந்து சென்றார். அதன் பின்னர் வாடிகனில் போபை சந்தித்தபோதும் கருணாநிதி கோட் ஷூட் அணிந்திருந்தார். கருணாநிதியின் மூன்று வார ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சுற்றுப்பயணம் முழுவதுமே கருணாநிதியை கோட், ஷூட், டை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பாணியை அடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆரும் பின்பற்றினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, பிரிட்டன், துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார். இருவரும் இடத்துக்கு ஏற்றார்போல் விதவிதமான கோட் ஷூட்டுகளை அணிந்து பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றனர். இந்த புகைப்படங்களை அப்போது அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
அடுத்த 2 மாதம் கழித்து அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற விழாவில் விருது வாங்க சென்ற முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் க்ரே நிற சூட் அணிந்து சென்று விருது வாங்கினார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, துபாய்க்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சர்வதேச பொருளாதார மையத்தில் கோட் சூட் அணிந்து பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார். அவர் அணிந்த கோட் ஷூட் சென்னையில் உள்ள சையது பாக்கர் நிறுவனத்தில் தயாரானது என்பது கூடுதல் தகவல்.