• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

2022-23-ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கரூரில் நடந்த விழாவில் முதல்-வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் 2022-23-ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று எரிசக்தி துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நேற்று நடந்தது. கரூர் கலெக்டர் பிரபு சங்கர் வரவேற்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து 10 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:- பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால் இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழக விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில், ஓராண்டில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்குவோம் என்று ஏற்கனவே அறிவித்தோம். அப்போது எல்லோரும் இது நடக்குமா? சாத்தியமா? முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். நடக்குமா என்று கேட்பதை நடத்திக்காட்டுவதும் – சாத்தியமா என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக்காட்டுவதும்தான் தி.மு.க. ஆட்சி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை யாரும் மறந்துவிட வேண்டாம். இனிமேல் அப்படி ஒரு எண்ணம், ஒரு சந்தேகம் யாருக்கும் வரவேண்டாம். உணவுப்பொருட்கள் விலை குறைவு 23.9.2021 அன்று இந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். அதில் இருந்து 6 மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒரு லட்சமாவது மின் இணைப்பையும் நான்தான் வழங்கினேன். இப்போது கூடுதலாக 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின் போது மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டும் தான் வழங்கப்பட்டன. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதத்தில் 1லு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம்.
நாடு முழுவதும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் விளைச்சலும் அதிகமாகி கொண்டிருக்கிறது. பாசன பரப்பும் விரிவடைந்து கொண்டிருக்கிறது. உணவுப்பொருள் உற்பத்தி கூடுதலாகி வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் உணவுப்பொருள்களின் விலை குறைவாக உள்ளது. பல சாதனைகள் பல்வேறு சமூகநலத் திட்டங்களின் மூலமாக வாழ்க்கைத் தரம் தமிழகத்தில் நிலையானதாக அமைந்திருக்கிறது. இவை அனைத்தும் தி.மு.க. ஆட்சியின் அடையாளங்கள். ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்காக உழைத்து வருகின்றன. திட்டங்களைத் தீட்டி வருகின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இன்றைய தேதி வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களினுடைய திறன் 34 ஆயிரத்து 867 மெகாவாட். மின்தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல், வரும் 2030-ம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 30 ஆயிரத்து 500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களை தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. முதன்மை மாநிலமாக திகழும் இதனால், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 2030-ம் ஆண்டில் 65 ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும். தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழும் இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ஜோதிமணி எம்.பி., எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.