வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தமிழகம் மற்றும் கேரளாவை சோ்ந்த 250 பட்டதாரி இளைஞர்களிடம் கோடி கணக்கில் மோசடி செய்தது தொடா்பாக மதுரையை சோ்ந்த தனியாா் ஏஜென்ஸி நிா்வாகிகள் பாரதிராஜா, நவீன், வைத்திஸ்வரன் மீது பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்தனர்.

தமிழகத்தில் வெளிநாட்டு வேலைக்காக பல ஆயிரக்கணக்கான படித்த, படிக்காத இளைஞர்கள் மோகம் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் கட்டடம், கூலிவேலை உட்பட பல தரப்பு பணிகளுக்கும் சம்மதம் தெரிவித்து மிக குறைந்த ஊதிய அளவில் வெளிநாட்டு பணிக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பி மதுரை எஸ் எஸ் காலனியில் உள்ள ஒரு தனியாா் ஏஜென்ஸியை மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதன் நிா்வாகிகள் ரஷ்யா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதைத் தொடா்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு தவணைகளில் ரூ.4 லட்சம் ரூபாயுடன் பாஸ்போர்ட்டையும் தனியார் நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யவில்லை. இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், பணத்தையும் திருப்பித்தரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து புகார் அளித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது: 250 இளைஞர்களிடம் ரூ.2 கோடி வரை வசூல் செய்தனர். தற்போது பாஸ்போர்ட், பணத்தை இழந்து தவித்து வருகிறோம். இவர்களை நம்பி ஏற்கெனவே பணிபுரிந்த வேலையையும் விட்டுவிட்டோம். எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எங்களைப் போன்ற இளைஞர்கள் தொடர்ந்து ஏமாறாமல் இருக்க மோசடி செய்த தனியார் ஏஜென்சி நிர்வாகிகள் மீது போலீஸார் உடனடியாக கைது நடவடிக்கை செய்ய வேண்டும் என்றனர். மேலும் நாங்கள் இழந்த பணத்தையும் எங்களுடைய அசல் பாஸ்போர்ட்டையும் மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக இதே ஏஜென்சி யை நம்பி பணம் முதலீடு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர்கள் ரஷ்யாவில் தற்பொழுது செய்வது தெரியாத சிக்கி இருப்பதாகவும் சிலர் இவர்கள் சொன்ன வேலைக்கு பதிலாக அங்கே கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் வலு கட்டாயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.





