• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசு அறிவுறுத்தல்..!

Byவிஷா

Dec 25, 2021

தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீPபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த 18-12-2021 அன்று போராட்டம் நடத்தியதையடுத்து, உடனடியாக அங்கு சென்ற தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து ஆவன செய்யும் என தெரிவித்துப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியதன் அடிப்படையில், பெண் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.


மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் முக்கியத்துவம் அளித்து வரும் அதே நேரத்தில், தொழிலாளர்களின் அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் இந்த அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும். அந்த வகையில், இதன் தொடர்ச்சியாக, 23.12.2021 அன்று மாலை தலைமைச் செயலகத்தில், தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ச.கிருஷ்ணன், , காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பி.தாமரைக்கண்ணன், பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுத் தரப்பில் கீழ்க்கண்ட ஆலோசனைகளை ஃ அறிவுறுத்தல்களை வழங்கி, அதனைச் செயல்படுத்துமாறு தெரிவித்தார்கள்.

அதன் விவரம் பின்வருமாறு:
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபுரியும் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும். தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும். தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும். தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்துத் தரமான உணவுகளைச் சமைத்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.


ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்புக் கேட்கும்போது வழங்க வேண்டும். விடுப்பில் செல்லும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தேவையான தொழிலாளர்களை மனிதவள முகமைகள் செய்து தர ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாக்ஸ்கான் நிறுவனத்தினர், தமிழ்நாடு அரசு தெரிவித்த அனைத்து ஆலோசனைகள் ஃ அறிவுறுத்தல்களை தவறாமல் செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.


பெண் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், மேலும், இந்நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது எனவும், அதனை ஒப்பந்ததாரர்கள் தரமாக வழங்குவதை இனி உறுதி செய்வதாகவும் தெரிவித்தனர். தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இத்தொழிற்சாலையை இவ்விடத்திலேயே விரிவுபடுத்தி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்படும் எனவும் உறுதியளித்தனர்.


சிப்காட் நிறுவனத்தின் மூலமாக, வல்லம் வடகாலில், ஊழியர்கள் தங்குவதற்கென விடுதிகள் சுமார் 18,750 பேர்கள் தங்கும் அளவில், ரூபாய் 570 கோடி செலவில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், 8 தொகுதிகளாக, 11 மாடிகள் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது. புதிய கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்பணிகள் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.