பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் உள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டில், ரோட்ரிகோ டியுடெர்ட்டை (79) வீழ்த்தி அதிபரானார்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க ரோட்ரிகோ டியுடெர்ட் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஏராளமானவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று குவித்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரோட்ரிகோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நடத்திய நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் முன்னாள் அதிபர் ரோட்ரிகோவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் ஹாங்காங்கில் இருந்து மணிலா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய ரோட்ரிகோ டியுடெர்டை பிலிப்பைன்ஸ் போலீசார் நேற்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.