திருநெல்வேலி மாவட்ட அதிமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கடந்த 1977-ம் ஆண்டு ஆலங்குளம் தொகுதி, 1980-ம் ஆண்டு பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவராவார். அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக கருப்பசாமி பாண்டியன் கடந்த 2000-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன்பின் 2006-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்து சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன், 2015-ம் ஆண்டு மே 14-ம் தேதி திமுகவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்த கருப்பசாமி பாண்டியன், 2018-ம் ஆண்டு திமுகவிற்கு தாவினார். இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். இந்த நிலையில் இன்று காலை உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.