• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : ஒரு நாள் சாமி

தமிழகத்தில் பொதுவாக அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அசைக்க முடியாத ஒன்றாக உள்ளது.சிலர் அதனை தங்களது அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று எண்ணினார்கள்.

ஆனால் அந்த திட்டம் தமிழகத்தில் பலிக்கவில்லை. தற்போது உள்ள காலத்தில் திங்கள் தொடங்கி ஞாயிறு வரை தினம் ஒரு சாமிக்கு விரதம் இருந்து கோயிலுக்கு செல்கின்றனர். அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நமது மண்ணுடன் கலந்த நம் மண்ணில் வாழ்ந்து மறைந்து தெய்வமாக வணங்கக்கூடிய நாட்டுபுற தெய்வங்களை மக்கள் மறந்துவிட்டனர். கலாசாரத்தின் பரிணாம வளர்ச்சி , பொருளாதரத்தை நோக்கி வேகமாக ஓடும் மக்கள் கூட்டம் இதற்கு மத்தியில் நமக்கு மக்கள் தெய்வங்களை பற்றி தெரிந்து கொள்ள கூட நேரமில்லை. அப்படி பட்ட மக்கள் மறந்த மக்கள் தெய்வங்களை குறித்து வாரந்தோறும் வெளியாகிறது இந்த மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்களின் கதை.


தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முத்தாலம்மன் என்று ஒரு அம்மன் சாமி இருக்கிறது. இன்று பல சாதிகள் அதைக் கும்பிட்டாலும் கவுண்டர் சாதிக்காரர்களின் சாமிதான் அது. முத்தாலம்மனின் கதை என்னா? கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் அந்தப் பகுதியில் முத்தாலம்மன் என்கிற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் மேல்சாதியான கவுண்டர் சாதியில் பிறந்தவள். இளம்பெண். அதே ஊரைச் சேர்ந்த கீழ்ச்சாதி என்று ஒதுக்கப்பட்ட பறையர் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனைப் பார்க்கிறாள், பேசுகிறாள். சிரிக்கிறாள், பழகுகிறாள். பிறகு காதல் வந்துவிட்டது. காதலித்தார்கள்.

இளைஞர்களுக்கு சாதி கிடையாதல்லவா? ஊர்ப்பெருசுகள் தானே சாதி என்கிற இழவைக் கட்டிக் கொண்டு அழுவார்கள்? ஆகவே முத்தாலம்மா ஒரு முடிவெடுத்தாள். தன் காதலனை இழுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டாள். இழுத்துக்கிட்டு ஓடிட்டா என்பது ஊர்ப் பெரிசுகளின் வாக்கு, நம்மைப் பொறுத்தவரை அவர்கள் மனம் விரும்பி இணைந்தார்கள். ஊரைப் பகைத்துக் கொண்டு அங்கேயே இருக்க முடியாது என்பதற்காக வேறு ஊருக்குப் போய்விட்டார்கள். அங்கே போய்க் கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்கள்.


சினிமாவில் வரும் வில்லனாக நிஜ வாழ்க்கையில் சாதி அவர்களைக் குண்டாந்தடிகளோடு துரத்தியது. தேடிக்கண்டுபிடித்து அவள் காதவனை அங்கேயே வெட்டிப்பலி கொடுத்தார்கள். அவளை மட்டும் ஊருக்கு இழுத்து வந்தார்கள். ஊர் எல்லையில் இருந்த குளக்கரையில் வைத்து அவளை குண்டாந்தடியால் அடி அடி என்று அடித்தே கொன்றுபோட்டார்கள். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. பெண்கள், குழந்தைகளெல்லாம் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்கள்.

ஆனாலும் சாதிப் பெரியவர்களை எதிர்த்து யாராலும் பேச முடியவில்லை. அப்போதுதான் போலீஸ், கோர்ட் சட்டம் என்று ஜனநாயகம் வரவில்லையே? தடி எடுத்த தடியர்கள் கையில்தான் எல்லாம் இருந்தது.


அந்தப் படுகொலையைக் கண்ணாரக் கண்ட எல்லோருக்கும். அன்று ராத்திரி தூக்கம் வரவில்லை கண்ணை மூடினால் அந்தப் பாவ முத்தாலம்மனின் கண்ணீரும் ரத்தமும் தான் கனவில் வந்தது. குழந்தைகள். எல்லாம் தூக்கத்திலிருந்து திடீர் திடீரென்று விழித்துக் கதறி அழுதன இப்படி ஒரு பெண் பாவமும் பழியும் ஊர் மேல் வந்துவிட்டதே என்று ஊரில் இருந்த சில நல்லவர்களும் தாய்மார்களும் கவலைப்பட்டார்கள் அவர்கள் கூடிப்பேசி ஒரு முடிவு செய்தார்கள்.

அதுதான் “இனிமேல் நாம் எல்லோரும் சேர்ந்து கோவில் கட்டி முத்தாலம்மனைச் சாமியாக்கி கும்பிடுவோம்” என்கிற முடிவு. சரி என்று கோயில் கட்டினார்கள் . தங்கள் பிள்ளைகளுக்கு முத்தாலம்மன் என்று பேர் வைத்தார்கள். கொல்லப்பட்ட அவள் கணவனை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.


ஆனாலும் சாதிப்பெரிசுகள் அப்படியே முத்தாலம்மனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளை எப்படிக் கும்பிட வேண்டும் என்று ஒரு வாய் மொழி உத்தரவு போட்டார்கள். அதாவது ஐப்பசி மாதம் சிறிய விழாவாக நடத்தினால் போதும். முதல் நாள் போய் சிலை செய்து எடுத்துவர வேண்டும். ஒருநாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்தும் அவனைக் கும்பிடலாம்.

அன்று இரவே அச்சிலையை எடுத்து வந்து குளத்தங்கரையில் வைத்துக் கட்டையால் அடித்து நொறுக்கிவிட வேண்டும். இதுதான் அம்மனை வழிபடும் முறை என்றார்கள். பறையனோடு ஓடிப்போய் நம்ம சாதிக்கூரவத்தைச் செடுத்தவளுக்கு இதுதான் மரியாதை என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை அந்த முத்தாலம்மன் இன்னும் கட்டையால் அடிபட்டுச் செத்துக் கொண்டிருக்கிறாள்.

இப்போது அப்பகுதிகளுக்குப் போனாலும் பார்க்கலாம். அடித்து நொறுக்கி ஆற்றில் கரைத்துவிடும் பழக்கமாக அது இன்னும் நீடிக்கிறது. முத்தாலம்மனை ‘ஒருநாள் சாமி’ என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இப்படி ஒரு நாள் சாமிகள் நம் நாட்டில் எக்கச்சக்கமாக இருக்கின்றன. பாவம் முத்தாலம்மன்.

(தொடரும்)