


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்திற்கு தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கல் நாரை வகையை சேர்ந்த பறவைகள் நூற்று கணக்கில் இங்கு உள்ள மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ளன. வெளிநாட்டு பறவைகள் வருகையினால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள்.. பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சங்கரபாண்டியபுரம் கிராமத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாடுகளிலிருந்து செங்கால் நாரை, கூழைக்கூடா உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் வெளிநாட்டு பறவைகளின் வருகையால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆண்டு தவறாமல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வெளிநாட்டு பறவைகளை கிராமத்தில் உள்ள மரங்களில் கூடுகட்டி குடும்பம் குடும்பமாக வசித்து ஒற்றுமைக்கு உதாரணத்தை எடுத்துரைக்கிறது.

வெளிநாட்டு பறவைகளை விருந்தினர் போல் வரவேற்று அவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர் இக்கிராம மக்கள். மேலும் வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்கும் நோக்கில் அவைகள் வசிக்கும் 6 மாத காலம் கிராமத்தில் திருமணம், சடங்கு உள்ளிட்ட சுபநிகழ்ச்சிக்கு பட்டாசுகள் கூட வெடிப்பதில்லை என கூறுகின்றனர்.
பறவைகள் உய்விடம் என தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கிராமத்தில் பறவைகளின் வசதிக்காக நீர் நிலைகளில் தூர்வாரி தண்ணீர் முறையாக தேக்கி வைக்கவும், வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக அறிவித்து வரும் நாட்களில் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதை உறுதி செய்ய வனத்துறையினரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

