

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில், 21.04.2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீடுகளின் மொத்த ஒதுக்கீட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 5% வழங்கப்பட வேண்டும் என்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
