• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு

சேலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சூரிய உதயமின்றி கருமேகங்கள் சூழ்ந்து கடந்த ஒரு வாரமாக காட்சி அளித்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு துவங்கி கனமழை இடைவிடாமல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. பின்னர் மீண்டும் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 248 மில்லி மீட்டர் அளவிற்கும், குறிப்பாக மாநகர பகுதிகளில் 66 மில்லி மீட்டர் அளவிற்கு அதிகப்படியாக மழையளவு பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அணைமேடு பகுதியில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மழைநீர் திருமணிமுத்தாற்றில் அதிகளவில் செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு பார்வையிட்டு வருகின்றனர்.