

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே வெள்ளம். அதேபோல் கொடைக்கானல் மலைப்பகுதி மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பள்ளங்கி கோம்பை அருகே மூங்கில்காடு கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அப்பகுதியில் உள்ள காட்டாற்றை கடந்துதான் ஊருக்குச் செல்ல வேண்டும்.நேற்று ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடி யாத நிலை ஏற்பட்டது.
கிராமத்துக்குச் செல்பவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்றனர். கிராமத்தில் இருப்பவர்கள் வெளியேற முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளங்கி கோம்பை பகுதியில் இருந்து மூங்கில்காடு மலைக் கிராமத்துக்குச் செல்ல காட்டாற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வேண்டும் என பழங்குடியின மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.
