• Thu. Apr 25th, 2024

மூளைச்சாவு அடைந்த ஒரே மகனின் கண்களை தானமாக வழங்கிய பெற்றோரால் நெகிழ்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ள திருவள்ளுவர் காலனி பகுதியினை சேர்ந்தவர் சின்னச்சாமி (44) கீதா தம்பதியினர். இவர்களுக்கு ஞானபாரதி (17) என்ற மகனும், சத்யாதேவி (13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னச்சாமியின் ஒரே மகனான ஞானபாரதி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் மூளைச்சாவு அடைந்த நிலையில் எவ்வித அசைவும் இன்றி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் சின்னச்சாமி – கீதா தம்பதியினர் தனது மகனின் உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்க தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மூளை சாவு அடைந்த நிலையில் இருந்த ஞானபாரதி இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனால் ஞான பாரதியின் உடலை மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்துள்ளனர். ஞானபாரதியின் பெற்றோர்கள் தனது உறவினர்களிடம் இதுகுறித்து மிகவும் வருந்தி உள்ளனர். இந்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர்கள் திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் ஸ்டார் நாகராஜன், இலக்கிய அணி மஞ்சில் செல்வி, திராவிட கழகத்தின் ஆண்டிபட்டி நகர தலைவர் ஆண்டிச்சாமி, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மூளைச்சாவு அடைந்த ஞானபாரதியின் கண்களை தேனி அரவிந்த் மருத்துவமனைக்கு தானமாக வழங்க முடிவு செய்தனர். இதனால் தேனி அரவிந்த் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூளைச்சாவு அடைந்து இறந்த ஞானபாரதியின் கண்களை மருத்துவ முறைப்படி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் ஞானபாரதியின் பெற்றோரிடம், ஸ்டார் நாகராஜன் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் மகன் இறந்தும் வேறு ஒருவர் உடலில் வாழ்ந்து வருகிறார் என்றும், வேறெருவர் கண்களுக்கு ஒளி தந்து வாழ்ந்து வருகின்றார் என்றும், ஞானபாரதி மறைந்தாலும் அவருடைய புகழ் என்றும் மறையாது என்றும் ஞானபாரதியின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார்கள்.

இந்நிலையில் தனது ஒரே மகனின் உடலை தானமாக வழங்கி முடிவெடுத்து தானமாக வழங்க முடியாத காரணத்தால் இரண்டு கண்களையும் வேறு ஒருவர் பயன்படும் வகையில் ஏற்பாடு செய்த பெற்றோர்களை அப்பகுதி மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *