• Wed. Apr 24th, 2024

மீனவர் ராஜ்கிரண் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!…

Byமதி

Oct 23, 2021

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடல் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் 3 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஒரு மீனவர் ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உறவினர்கள் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மட்டுமின்றி 5 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும், கடந்த 3 தினங்களாக கோட்டைப்பட்டினம் கடைவீதி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்த ராஜ்கிரணின் உடலை உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும். கைது செய்யப்பட்ட 2 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், துரித நடவடிக்கை எடுத்த இந்திய அரசு, இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரிடம் ராஜ்கிரணின் உடலை ஒப்படைத்தனர். மேலும், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்களும், 2 அதிகாரிகளும் 2 விசைப்படகுகளில் சென்று, சர்வதேச எல்லையில் ஒப்படைக்கபட்டது.

தற்போது, கோட்டைப்பட்டினம் மீன்படி துறைமுகத்திற்கு உயிரிழந்த ராஜ்கிரணின் உடலை கொண்டு வந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் மீனவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு நேற்று தமிழக முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். கடலில் மூழ்கிய விசைப்படகிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *