மதுரை எல்லிஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து 78 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் உயிரிழந்த நிலையில், மீனா என்ற 78 வயது மூதாட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முதல் அவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்
மதுரை டவுன் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் சுரேஷ் கண்ணா தலை மேலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியின் குழந்தைகள் சென்னையில் பணியாற்றி வருவதால், அவர் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாக வயதானவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது இதனால் வயதானவர்களை தனியாக விட வேண்டாம் என அல்லது பாதுகாவலர் யாரையாவது நியமனம் செய்து அவர்களை பாதுகாக்க வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்கும் என தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.




