• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யானைக்கு கரும்பு கொடுத்தவருக்கு அபராதம்

யானைக்கு கரும்பு கொடுத்தவருக்கு ரூ 75 ஆயிரம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. யானைகள் உணவு தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி டிரைவர்கள் யானைகள் தின்பதற்காக சாலையோரங்களில் கரும்பு கட்டுகளை போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோல் வீசப்படும் கரும்புகளை ருசித்து பழகிவிட்ட யானைகள் கரும்புகளுக்காக ரோட்டிலேயே சுற்றுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துகின்றன. அதனால் கரும்பு கட்டுகளை ரோட்டு ஓரம் வீச வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அப்போது கரும்பு பாரம் ஏற்றி வந்த கர்நாடக மாநில லாரி டிரைவர் ஒருவர், லாரி மீது ஏறி கரும்பு கட்டுகளை எடுத்து ரோட்டு ஓரம் நின்றிருந்த யானைக்கு கொடுத்து கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்த வனத்துறையினர், உடனே சம்பந்தப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த சி.சித்தராஜ் என்பதும், அவர் மைசூருவில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனவிலங்குகளுக்கு முறையற்ற வகையில் உணவு வழங்கியதாக டிரைவர் சி.சித்தராஜ்க்கு வனத்துறையினர் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தார்கள். கரும்பு கட்டுகளை யானைகளுக்கு கொடுக்கும் லாரி டிரைவர்களை இதுவரை எச்சரித்து வந்த வனத்துறையினர் திடீரென கர்நாடக மாநில லாரி டிரைவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.