• Sun. Sep 8th, 2024

அறிமுக நடிகர்களை வைத்து படமெடுப்பது சவாலானது – பாக்யராஜ்

Byதன பாலன்

Feb 23, 2023

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், திரில்லர் டிராமாவாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் “அரியவன்”. மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 22.02.2023 மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.


இவ்விழாவினில் இசையமைப்பாளர் கிரி நந்த் பேசியதாவது…

இந்த படத்தில் ஒரு பெப்பியான பாடல் செய்துள்ளேன். அனைவரும் விருப்பப்பட்டு உழைத்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது…

இப்படத்தில் இரண்டாவது பாடலை நான் இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் இப்பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குநர் மித்ரன் R ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் மிகப்பெரிய இயக்குநர் மிக நன்றாகப் பாடலை உருவாக்கியுள்ளார் என்றார்.

நாயகன் ஈஷான் பேசியதாவது…

இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இப்படிப்பட்ட பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே ஆசீர்வாதம் தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. பொதுவாக இயக்குநர் மித்ரன் R ஜவஹர் படங்கள் கருத்துச் சொன்னாலும், குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும். இந்தப்படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, அவர்கள் எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. அதை அனைவரும் ரசிக்கும் வகையில் படம் சொல்லியுள்ளது. இந்தப்படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். எல்லோரும் இந்தப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது,..

அரியவன் படம் டிரெய்லர் நன்றாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துக்கள். எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப்படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் மித்ரனுடன் உத்தம புத்திரன் படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *