

பெண்மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக்த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான தனது ஆண் நண்பருடன் கடந்த மார்ச் 16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஷேர் ஆட்டோவில் வேலூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த ஆட்டோவில் பயணிகள் போல் ஏற்கெனவே அமர்ந்திருந்த கும்பல், இருவரையும் கத்தி முனையில் கடத்தி செல்போன், 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்ததுடன் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர், ஆண் மருத்துவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் பணத்தையும் எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு மார்ச் 22-ல் மின்னஞ்சல் வழியாக பெண் மருத்துவர் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இதில், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் இளம் சிறார் ஒருவரை தவிர மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிந்து 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார்