• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோடைகால பயிற்சி முகாமுக்கு கட்டணம்: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

Byவிஷா

Apr 29, 2024

கோடைகால பயிற்சி முகாமுக்கு மாணாக்கர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
அதன்படி, இந்தாண்டு 2024 ஏப்ரல் 29ஆம் தேதி முதல் 2024 மே 13ஆம் தேதி வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்ட வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.
தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதமரை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் விடியா திமுக அரசு தமிழக மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் முயற்சி. இந்த ஆட்சியாளர்களின், குறிப்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “தகுதி இல்லாதவர் கையில் அதிகாரம் கிடைத்தால், அவர் திறமைசாலிகளைக்கூடத் தகுதியற்றவர்களாக்கி விடுவார்” என்ற மேலை நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதலமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்திசாலி அமைச்சரிடம் இதைவிடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
விளையாட்டில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த நாடகமாடி அரசின் செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.