• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 6, 2023

சிந்தனைத்துளிகள்

உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்..!

‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன், ஞானியிடம்.
‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?’ என்று ஞானி கேட்டார்.
‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.
கள்வர் பயம் இல்லை.
அதிக வரிகள் விதிப்பதில்லை.
முறையாக நீதி செலுத்தப்படுகிறது.
நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.
இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை’ என்றான்.
‘அப்படியானால் ஒன்று செய்.
உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’ என்றார் ஞானி.
‘எடுத்துக் கொள்ளுங்கள்’என்றான் மன்னன்.
‘நீ என்ன செய்வாய்’ என்றார் ஞானி.
‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’ என்றான் அரசன்.
‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.
நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.’ என்றார்.
சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.
அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.
அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

‘அது கிடக்கட்டும்’ என்ற ஞானி ‘நீ இப்போது எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டார்.
‘நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்’
‘முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா…..???’
‘இல்லை’
‘அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்?
இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?’
விழித்தான் அரசன்.
ஞானி சொன்னார்.
‘அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை.
நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.
அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.
நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.
இந்த உலகம் எனதல்ல.
இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது.
இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.