• Wed. Dec 11th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 28, 2023

சிந்தனைத்துளிகள்

உலகத்தில் சில பேர் நாம் எதற்காகப் பேசுகிறோம் யாரிடம் பேசுகிறோம் எவ்வளவு பேசுகிறோம் என்கிற கவலையில்லாமல் சும்மா பேசிக் கொண்டே இருப்பார்கள்.  
யோசிக்காமல் பேசினால் அதிகமாகப் பேசினால் அது தவறாகப் போக வாய்ப்புகள் அதிகமாகும் இல்லையா? அதனால் தான் அன்பாகப் பேசு பணிவாகப் பேசு என்றெல்லாம் பலவாறாக அறிவுறுத்திய இராமலிங்க அடிகளார் இறுதியாகப் பேசாதிருந்தும் பழகு என்றார். 
வள்ளுவரோ ஒரு படி மேலே போய் “    நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று” என்றே சொல்லிவிட்டார். உயர்ந்த எண்ணமுடையவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள், சராசரி மனிதர்கள் நிகழ்வுகளை விவாதிப்பார்கள்.  ஆனால் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களோ மற்றவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்' என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். 
அமைதியாக குறைவாகப் பேசுபவர்கள் தானே மதிக்கப்படுவார்கள். மற்றவர்களைப் புறங்கூறாமல் இருப்பது நல்ல பேச்சுக்கு அவசியம் அல்லவா? வற்புறுத்திப் பிறர் மீது நம் எண்ணங்களைத் திணிக்கக் கூடாது. நாம் பேசியது போதவில்லை என்ற உணர்ச்சி கேட்பவரிடம் உண்டாகும் படி சுருங்கப் பேச வேண்டும். 
நீங்கள் தனியாக இல்லாமல் மற்றவர்களுடன் வாழ நேர்ந்தால் பேச்சின் மூலம் இடை விடாமல் வெளியே கொட்டாதிருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் மெல்ல மெல்ல ஒருவர் உள்ளத்தை புரிந்து கொள்ளும் திறமை வளர்வதைக் காண்பீர்கள். அப்பொழுது மிகக் குறைந்த அளவில் பேசியே அல்லது பேச்சு இல்லாமலேயே ஒருவர் உள்ளத்தில் உள்ளதை மற்றவருக்கு அறிவிக்க முடியும்.