

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (26). இவருக்கும், அதே பகுதியைச் மாசாணம் (22) என்ற பெண்ணிற்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாகராஜ் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் மாசாணத்தின் தந்தை முத்துக்குட்டி (50) கடந்த 6 மாதத்திற்கும் மேலாக, மருமகன் நாகராஜ் வீட்டில் வந்து தங்கி வசித்து வருகிறார்.
ஏற்கனவே கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்த நாகராஜ், தனது மாமனாருக்கு சேர்த்து உழைக்க வேண்டி இருந்ததால் தனது மாமனாரை வீட்டை விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் நாகராஜிற்கும், முத்துக்குட்டிக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் வழக்கம் போல மாமனாருக்கும், மருமகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு கிடந்த கட்டையை எடுத்த முத்துக்குட்டி, மருமகன் நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த முத்துக்குட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று நாகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மருமகனை தாக்கி கொலை செய்த மாமனார் முத்துக்குட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

