தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் 1000.க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
அறுவடை செய்யப்பட்ட நெல்களை அப்பகுதி விவசாயிகள் கடந்த 40 நாட்களாக மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்தனர்.

இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் குறைந்த அளவிலேயே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பெரும்பாலான விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் அவை கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் தனியார் நெல் வியாபாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தின் காரணமாக நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த நெல் தற்பொழுது சேதம் அடைந்து காணப்படுவதாக கூறி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல்லினை கொள்முதல் செய்ய மறுத்துள்ளனர்.
இதனை கண்டிக்கும் விதமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பெரியகுளம் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழ்நாடு வாணிப கழக மேலாளர் நெல்லை கொள்முதல் செய்ய முடியாது என்று தெரிவித்ததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.