• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனியில் வனத்துறை அதிகாரியை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

பயிர்களை சேதப்படுத்திய வனத்துறையை கண்டித்து புலிகள் காப்பக தேனி துணை இயக்குநர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மேகமலை வன உயிரின சரணாலயத்தை,கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அனில்கள் சரணாலயத்துடன் இணைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டா நிலங்களில் பல தலைமுறைகளாக இப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதிக்குட்பட்ட பொம்முராஜபுரம் பகுதியில் பயிரிடப்பட்ட ஏலக்காய், தக்காளி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை வனத்துறையினர் சேதப்படுத்தியதாக கூறி, 50க்கு மேற்பட்டோர் , தேனி கே.ஆர்.ஆர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேதப்படுத்திய பயிர்களுடன், அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் வனச்சரகர் சதீஷ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.