• Tue. Apr 30th, 2024

திருச்செங்கோடு நகராட்சியில் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் விவசாயிகள்

ByNamakkal Anjaneyar

Apr 8, 2024

நகராட்சியின் கழிவுநீர் விவசாய வயல்களுக்குள் பாய்ந்து நோய் தொற்றுகள் ஏற்படுவதாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நகராட்சி பகுதிகளின் கழிவுநீர்கள் செல்ல முறையான கான்கிரீட் வழித்தடமோ சுத்திகரிப்பு நிலையமோ சுத்திகரிப்பு இயந்திரங்களோ இல்லாமல் திருச்செங்கோடு நகரத்தில் இருந்து கூட்டப்பள்ளி ஏரி வழியாக ஏமப்பள்ளி ஏரி வரை சென்றடைகிறது.

இதில் நகர பகுதிகளில் உள்ள சாணார்பாளையம் சி ஹெச் பி காலனி கொல்லப்பட்டி குள்ள வண்ணாங்காடு ஆவரங்காடு பாலியக்காடு சங்கங்காடு கூட்டப் பள்ளி காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் ஒன்றிய பகுதியில் உள்ள அய்யகவுண்டம்பாளையம் முதல் ஏமபள்ளி வரை கழிவுநீரானது சென்றடைகிறது. அவைகள் செல்ல சரியான வழித்தடம் இல்லாமல் விவசாய வயல்களில் பாய்ந்து பயிர்களை சேதம் செய்து விடுகின்றன. இதனால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு மழைக்காலங்களில் பயிரிட்ட கிழங்கு கம்பு சோளம் நெல் வாழை போன்ற பல்வேறு பயிர்களும் கழிவு நீரால் சேதம் அடைந்து விடுகின்றன. இதனால் பயிரை நம்பி வாழ்ந்த விவசாயிகள் பொருளாதாரத்தில் பின்னடைவுக்கு செல்வதோடு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் இந்தப் பிரச்சினைகளை சரி செய்து தருவதாக அரசியல் வாதிகள் அறிக்கை மட்டுமே தருகிறார்கள் என்றும் ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதனால் பகுதி பொதுமக்களுக்கு அதிகப்படியான கேன்சர் மற்றும் பல்வேறு விதமான தொற்று நோய்கள் ஏற்பட்டு வருவதாகவும் கால்நடைகள் பெரிதளவு பாதிக்கப்பட்டு புதிது புதிதாக நோய்கள் தாக்கி இறந்து விடுவதாகவும், நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகள் சுமார் 500 ஏக்கர் மேற்பட்ட விவசாய நிலங்களும் ஏரி மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டும் குடியிருப்பு வீடுகள் நிலத்தடி நீர் மாசால் கிரிமிகள் அரித்து வீடுகளின் அஸ்திவாரங்கள் முற்றிலும் சேதம் அடைந்தும் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் இந்த முறை நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் தங்களுடைய ஜனநாயக உரிமையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக மனு கொடுக்க வந்தபோது வருவாய் கோட்டாட்சியர் அங்கு இல்லாத காரணத்தால் அவரது நேரடி உதவியாளர் கார்த்திகேயனிடம் தங்கள் தேர்தல் புறக்கணிப்பு மனுவை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *