கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சென்னையில் கண் அழற்சி பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர் சீனிவாச ராவ் தெரிவித்தார். கோடை காலத்தில், உலர்ந்த கண்கள், கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமையால் ஏற்படும் கண் அழற்சி மற்றும் கண் காயங்கள் என அதிகளவில் ஏற்படுகின்றன. அதன்படி, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு, ஒவ்வாமைகள் மற்றும் காயங்களில் இருந்து, கண்களை பாதுகாப்பது அவசியம். கண்களில் கண்ணீர் சுரக்காதபோது, உலர்ந்த கண்கள் பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே, கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தண்ணீர் அல்லது சொட்டு மருந்தை பயன்படுத்தலாம். கடந்த இரண்டு வாரங்களாக, இளம் சிவப்பு கண் நோய் என்ற கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கண் தொற்றுகள் வராமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக நீங்கள் இருப்பின், லென்ஸ்களை கண்ணில் பொருத்துவதற்கும் அல்லது அகற்றுவதற்கும் முன்னதாக உங்களது கைகளை கழுவுவது உள்பட முறையான தூய்மை நடைமுறைகளை கடைபிடிக்கவும். கண்களை ஈரபதத்துடன் வைத்திருப்பதுடன், சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ள சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்ல வேண்டும். நீர்ச்சத்து குறையாதவாறு பானங்களை அருந்த வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.