திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அதில் 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு எட்டு முப்பது மணியளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகளை ஏற்றி வந்த விரைவு ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் விரைவு ரயிலில் இருந்த 13 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், 2 ஏசி கோச் பெட்டிகள் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து விபத்து நேர்ந்த இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்த நிலையில், காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலிருந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட தகவலில், சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவு ரயிலானது பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து மெயின் லைன் வழியாக கவரப்பேட்டை அடுத்து ஸ்டேஷன் வழியாக இயக்க கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. கவரப்பேட்டை ரயில் நிலையம் நுழைந்தபோது ரயில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் சிக்னலின்படி மெயின் லைனுக்குள் செல்லாமல், லூப் லைனுக்குள் மாறிச் சென்று, சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒடிசா ரயில் விபத்தை போல இந்த விபத்தும் சிக்னல் கோளாறால் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
