
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிறந்த நாளை ஒட்டி காரைக்கால் காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக கொண்டாட்டம்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் ஏழை மாரியம்மன் கோவிலில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் ஏற்பாட்டில் மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நீண்ட ஆயுள் பெற சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பிறந்த நாள் இளைஞர் காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் தூய மரியன்னை தேவாலயத்தில் சிறுபான்மையினர் அணி சார்பில் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் ஏற்பாட்டில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து மஸ்தான் சாகிபு தர்காவில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் தண்ணீர் ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது தெற்கு தொகுதி வட்டார தலைவர்கள் முஜிப்ரகுமான், பிரகாஷ் ஆகியோர் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காரைக்கால் அம்மையார் அன்னதான மண்டபத்தில் மீனவர் காங்கிரஸ் தலைவர் அஞ்சப்பன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி நிர்மலா, மாவட்ட செயலாளர் கருணாநிதி, உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
