• Tue. Apr 30th, 2024

மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது ஆவேச பேச்சு

ByN.Ravi

Apr 17, 2024

ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு 100 கோடி செலவு செய்த திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிர்க்கும் வழங்க மறுக்கிறது என மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆவேசமாக பேசினார்.

மதுரை வாடிப்பட்டி பகுதியில், அதிமுகவின் தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது;-
தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்று இந்தத் தொகுதியை வளர்ச்சி மிகுந்த பகுதியாக உருவாக்கித் தருவார். ஏனென்றால், அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கடந்த மூன்று வருட திமுக ஆட்சியில் எந்த ஒரு நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
எடப்பாடியார் முதல்வராக இருக்கும்போது, அலங்காநல்லூரில் உள்ள பாரம்பரிய வாடிவாசலை திறந்து வைத்தார். ஆனால், கலைஞர் கருணாநிதியின் பெயரை வைப்பதற்காகவே, அலங்கநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்துள்ளார் ஸ்டாலின். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டினேன் என்று மார் தட்டிக் கொள்கிறார் ஸ்டாலின், ஆனால், அதற்கு கரண்ட் பில் கூட கட்டவில்லை என்பதுதான் திமுக ஆட்சியின் அவலநிலை.
ஆகவே, ஜல்லிக்கட்டுக்காக மைதானம் கட்டவில்லை. கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காகவே கட்டப்பட்டது. ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு 100 கோடி செலவு செய்த திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிர்க்கும் வழங்க மறுக்கிறது.
எடப்பாடியாரின் அதிமுக ஆட்சியில் 2 கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கினோம். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்றால், அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமிக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள் என்றார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், உசிலம்பட்டி மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, ஒன்றியச் செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ், தெற்கு கொரியர் கணேசன், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் வாடிப்பட்டி அசோக், சோழவந்தான் முருகேசன், அலங்காநல்லூர் அழகுராஜா, பாலமேடு குமார், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மற்றும் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் அதிமுகவின் பிற அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *