ரயில்வே தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி பொது கழிவுப் பொருள் களைதல், மின்னணு கழிவு பொருட்கள் மேலாண்மை, பழைய ஆவணங்களை மின்னணுமயமாக்கல், விதிமுறைகளை எளிதாக்கல், உபரி நில மேலாண்மை மற்றும் அழகு படுத்துதல் குறித்த சிறப்பு முகாம் 5.0 மதுரை ரயில் நிலைய வளாகத்தில் . தூய்மை பணியில் கழிவுப் பொருள் மேலாண்மையும், ரயில்வே வளாகங்களை அழகுபடுத்துதல் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கிறன.

இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் கழிவு பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகு படுத்துகிறார்கள். அந்த வகையில் மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் இரும்பு தகடுகள், நீண்ட குழாய்கள், போல்ட், நட்டுகள், ஆங்கில சி எழுத்து வடிவ இரும்பு பொருட்கள், ரயில் பெட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடும் அச்சாணி, உடைந்த இரும்பு சுருள், ரயிலை நிறுத்த உதவும் வாயு அடைப்பான்கள், திறப்பான்கள், வளையங்கள், தண்டவாள துண்டுகள், தண்டவாளத்தை ரயில் பாதையுடன் இணைக்கும் கிளிப்புகள், ரயில் பாதை சந்திப்புகளை இணைக்க பயன்படும் வாஷர் வளையங்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி கோவில் கோபுரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த கோபுரத்தை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் குண்டேவார் பாதல் அவர்களது வழிகாட்டுதலோடு மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் ரமேஷ், அருண்குமார், கண்ணன், ஜெரால்ட் ஆண்ட்ரூஸ், பினாய் குமார், ஜஸ்டின் பீட்டர், லக்ஷ்மணன், சண்முக பாண்டி, இசக்கி ராஜா, தாமஸ், ரூபேஷ், விகாஸ் குமார் குப்தா, குருமூர்த்தி ஆகியோர் பத்து நாட்களில் உருவாக்கியுள்ளார்கள். இந்தக் கலை பொருள் ரயில்வே ஊழியர்களின் புதுமையான கண்டுபிடிப்பு, திறமை, கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு, நிறுவனத்தில் உள்ள வளத்தை பலமாக்கும் பண்பு ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது. இந்தக் கலைப் பொருள் தற்போது மதுரை கோட்ட ரயில்வே அலுவலக கட்டிடத்தின் முன் வாசல் அருகே நிறுவப்பட்டு பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.