நற்றிணைப் பாடல் 187:
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய
பல் பூங் கானலும் அல்கின்று அன்றே
இன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டி
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய
தேரும் செல் புறம் மறையும் ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே
பாடியவர்: ஒளவையார்
திணை: நெய்தல்
பொருள்:
நெய்தல் பூ குவியும்படி நிழல் கிழக்குப் பக்கமாக ஓடியது. மண்டடிலம் மேற்குத் திசை மலையில் மறைந்தது. பூத்திருக்கும் கடல்நிலம் உறங்கலாயிற்று. அப்போது கொண்கன் வந்த தேரும் மணியை ஒலித்துக்கொண்டே சென்று மறைந்தது. நான் என் உடலில் தோன்றும் காம உணர்வுடன் அந்தத் தேரை தொழுது வணங்கினேன். வண்டுகள் மொய்க்கும்படித் தேன் ஒழுகும் பூ மாலையை அவன் அணிந்திருந்தான். மின்னல் தெரிக்கும் வளைந்த மணியாரமும் அணிந்திருந்தான். அவனோடு சிரித்துத் திளைத்து மகிழ்ந்தேனே அந்தப் பொழிலும் உறங்கலாயிற்று. நான் உறங்கவில்லை. தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.