• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Feb 2, 2023

நற்றிணைப் பாடல் 107:
உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டு ஒழிந்து
ஆனாக் கௌவை மலைந்த
யானே தோழி நோய்ப் பாலேனே.

பாடியவர்: பெயர் இடம் பெறவில்லை
திணை: பாலை

பொருள்:

காதலனைப் பிரிந்து கலங்கும் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

என் நெஞ்சுமட்டும் நல்வினை செய்திருக்கிறது. ஓமை நெற்று ஒலிக்கும் காட்டில் அவர் செல்கிறாரே அவருக்குப் பின்னே சென்றுகொண்டிருக்கிறது. நான் மட்டும் (என்ன பாவம் செய்தேனோ) இங்கே அவரை நினைத்து வருந்திக்கொண்டு கிடக்கிறேன். இதை நினைக்கும்போது எனக்கே சிரிப்பு வருகிறது. அவர் புலி வாழும் அந்தக் காட்டில் செல்கிறார். தன் தந்தம் போன்ற காய் தொங்கும் நார் இல்லாத பாலை மரத்தை யானை கிழிக்கும் காட்டு வழியில் செல்கிறார். இலை இல்லாத ஓமை மரத்தில் நெற்றுகள் காற்றில் ஆடி ஒலிக்கும் காட்டு வழியில் செல்கிறார். அவருடன் செல்லும் என் நெஞ்சு செய்த நல்வினைப் பயனையும், அவருடன் செல்ல முடியாமல் ஊரார் பழி தூற்றிக்கொண்டிருக்கையில் தனித்துக் கிடக்கும் நான் செய்த தீவினைப் பயனையும் நினைக்கும்போது எனக்கே சிரிப்பு வருகிறது.