நற்றிணைப் பாடல் 106:
அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்
திணை: நெய்தல்
பொருள்:
தலைவன் தன் தேர்ப்பாகனிடம் தன் காதலி செய்ததைச் சொல்கிறான்.
பாகனே! உனக்குத் தெரியுமா? கடலலை மணலில் ஏறித் திரும்புகிறது. அந்தப் பகுதி மணக்கும்படி நண்டு வரிக்கோடு போட்டுக்கொண்டு ஓடி விளையாடிவிட்டு வளையில் நுழைந்துகொள்கிறது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் என் ஆசை நோயை வெளிப்படுத்தினேன். அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் தன் கையில் மணந்துகொண்டிருந்த ஞாழல் மலரைத் தடவி கையால் உதிர்த்துக்கொண்டிருந்தாள். அந்த மடப்பெண் அறிவு மயங்கி நின்றாள். (இதன் பொருள் என்னவாக இருக்கும்?)