• Sat. Apr 27th, 2024

மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ByA.Tamilselvan

Sep 28, 2022

யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு சட்டமன்றத்தில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற என்ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி அரசின் அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மின்துறை போராட்ட குழுவினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். இதனால் மின்துறை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே தொழிற்சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். இதனை ஏற்று மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர். இந்த நிலையில் மின்துறையை தனியார் மயமாக்க அமைச்சரவை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மின் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *