• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதா : சீர்திருத்தமா? ஜனநாயக மீறலா?

ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே அதனைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

முதன்முதலாக வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் 2014-ல் நிசாமாபாத், ஹைதராபாத் மாவட்டங்களில் மாதிரித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இதன்மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நகல் வாக்காளர் அட்டைகள் நீக்கப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் பட்டியல் சீரமைப்பு அங்கீகாரத் திட்டம் மூலம், இதை தேசியத் திட்டமாக்கி வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கத் தொடங்கியது.

எனினும் இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு ஆதார் விவரங்களைச் சமூக நலத்திட்டங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்தது. 2015ஆம் ஆண்டில் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தபோது, அதே உச்ச நீதிமன்ற அமர்வு அதற்குத் தடை விதித்தது.
இதையடுத்து ஆந்திர மற்றும் தெலங்கானா தலைமைத் தேர்தல் ஆணையர், தெலங்கானாவில் ஆதாருடன் இணைக்கப்பட்ட 40 லட்சம் வாக்காளர்களின் பெயரை நீக்கினார். ஆந்திராவில் 25 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. வாக்காளர்களுக்குத் தெரியாமலே இது நடந்தது. இதனால் 2018 தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில், சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதேபோல 2019 ஆந்திரா பொதுத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்காளர் விவரங்கள் கசிந்ததாகவும் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விசாரித்தபோது, வழக்கம்போல் தங்களிடம் இருந்து எந்த விவரமும் கசியவில்லை என்று ஆணையம் மறுத்தது.

இந்த சூழலில், மத்திய பாஜக அரசு தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதாவை (The Election Laws (Amendment) Bill 2021) டிச.20 மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
மசோதா சொல்வது என்ன?

இந்த மசோதா மொத்தம் 4 சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையும், ஆதார் அட்டையும் இணைக்கப்பட வேண்டும் என்பது முதல் சீர்திருத்தமாகும். எனினும் இந்தத் திருத்தத்தைக் கட்டாயமாக்காமல், வாக்காளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆவது சீர்திருத்தமாக, புதிய வாக்காளர் சேர்ப்பு முறைகள் அதிகரிக்கப்பட உள்ளன. முன்னதாக 18 வயது நிரம்பியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி 1ஆம் தேதி மட்டுமே புதிதாக வாக்களிக்கப் பதிவு செய்ய முடியும். இதற்காக இளம் வாக்காளர்கள் 1 ஆண்டு காத்திருக்க வேண்டும். இந்நிலையில் தற்போது வாக்காளர் சேர்ப்பு நடைமுறை ஆண்டுக்கு 4 முறை செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய 4 தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு நடைபெறும்.

பாலினச் சமத்துவத்துக்கு முக்கியத்துவம்

3ஆவதாக பாலினச் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதாவது, வாக்காளர் அட்டையில் உள்ள மனைவி (wife) என்ற வார்த்தைக்குப் பதிலாக, இணையர் (spouse) என்ற பிரயோகம் இனி பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு இதுநாள் வரை பாதுகாப்புப் பணியில் இருக்கும் கணவரால் நேரடியாகச் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க முடியாத சூழலில், வீரருக்கு பதிலாக அவரின் மனைவி சர்வீஸ் வாக்கைச் செலுத்தலாம்.
ஆனால் பெண் வீரர் இதுபோன்ற பணியில் இருக்கும்போது, அவர் வாக்களிக்க முடியாத சூழலில் சர்வீஸ் வாக்கை அவரின் கணவர் வாக்களிக்க முடியாது. இந்த சீர்திருத்தம் மூலம் கணவரும் வாக்களிக்க முடியும்.
கடைசியாக 4ஆவது சீர்திருத்தமாக, தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஓர் இடத்திலும் தேர்தல் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. முன்னதாகத் தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய நிறுவனங்களைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்வதில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்தத் திருத்தம்மூலம் தேர்தல் ஆணையத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்படுகின்றன.
’ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான முன்னெடுப்பு’

ந்த மசோதாவுக்கு, குறிப்பாக ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான முன்னெடுப்பு இது என்றும் குற்றம்சாட்டுகின்றன. எனினும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு, மக்களவையில் மசோதாவை நிறைவேற்றியது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையையும் நிராகரித்தது.

”இந்த மசோதா குறித்து மக்களிடம், மத்திய அரசு கருத்துக் கேட்கவில்லை. பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபிறகு, நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற பிறகே மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்” என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுகிறது

ஏஐஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி மக்களவையில் பேசும்போது, ”இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த மசோதா குலைக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறுகிறது. மத்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தனித்தன்மையை மறுக்கிறது. சுதந்திரத்தைக் குறைக்கிறது” என்று கூறியிருந்தார்.

அதேபோல காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ”ஆதார் இருப்பிடத்துக்கான ஆதாரம் மட்டுமே. குடியுரிமைக்கான ஆதாரமல்ல. வாக்களிக்கும் மக்களிடம் ஆதாரைக் கேட்பதன் மூலம், நீங்கள் இருப்பிடத்தையே கோருகிறீர்கள். குடியுரிமையை அல்ல. இதன்மூலம் குடியுரிமை அல்லாதோருக்கு நீங்கள் வாக்களிக்கும் உரிமையைக் கொடுக்கிறீர்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகள் நீக்கப்படும்
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் கூறும்போது, ”இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வாக்காளர்களை மதம், சாதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கும் (ப்ரொஃபைலிங்), அவர்களை மதம், சாதி அடிப்படையில் குறி வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கும், குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் வழி ஏற்படுத்திவிடும். இதனால் நாடாளுமன்ற ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் இந்த சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டும் அல்லது இந்த மசோதாவைத் தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுமாறு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

எனினும் இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தமிழக பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, ”தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேறும். அதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

இந்த மசோதாவில் எந்த இடத்திலும் ஆதார் கட்டாயம் ஆக்கப்படவில்லையே? விருப்பம் இருப்போர் கொடுக்கலாம் என்றுதானே கூறப்பட்டுள்ளது?” என்று தெரிவித்தார்.

ஆதாருடன் இணைப்பதால் என்ன பிரச்சினை?

ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தும்போதும் விருப்பம் என்றுதானே முதலில் கூறப்பட்டது. பிறகு கட்டாயம் ஆக்கப்படவில்லையா என்று கேட்டதற்கு, ”இணைப்பைக் கட்டாயம் ஆக்கினால் என்ன பிரச்சினை என்று கேட்கிறேன். ஆதார் தகவல்கள் எந்த விதத்திலும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் எங்களின் அரசு தெளிவாக இருக்கிறது.
பொதுவாக அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் எதிர்க் கட்சிகள் எதிர்க்கின்றன. போராட்டம் நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில்தான் குறிக்கோளுடன் இருக்கின்றன. ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும், அவர்கள் வாக்களிக்க முடியாது என்று எப்படி ரத்து செய்ய முடியும்? அந்த உரிமை யாருக்கு இருக்கிறது? எந்தக் காலத்திலும் அத்தகைய செயல்களை எங்கள் அரசு செய்யாது” என்று கருப்பு முருகானந்தம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களுக்காகவே ஆதார் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்திருக்கும் சூழலில், தனிமனிதர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.