

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்கும் பணிக்காக திமுக, அதிமுக கட்சிகள் இன்று களம் இறங்குகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக திமுக சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில், டிகே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் எழிலரசன், எழிலன், எம்பிக்கள் ராஜேஷ்குமார், அப்துல்லா மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மண்டலவாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இன்று தூத்துக்குடியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்வை தொடங்க உள்ளனர்.
இதேபோல் அதிமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழு சார்பில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, மண்டலவாரியாக சென்று பொதுக்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களிடம் கருத்துகளை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணி இன்று தொடங்கி, 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்படி இன்று சென்னை மண்டல கருத்து கேட்பு கூட்டம் வேலப்பன்சாவடியில் நடைபெறுகிறது. தொடர்ந்து வேலூர் மண்டலத்தில் வேலூர், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சேலத்திலும் கூட்டம் நடைபெறும்.

