மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த திருட்டில் ஈடுபட்ட மூதாட்டி சிசிடிவி காட்சியின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார்.இவர் திருகார்த்திகை தினமான டிசம்பர் 13-ம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ளார். அன்று கோயிலில் அதிக அளவில் கூட்டம் இருந்துள்ளது. சாமி தரிசனம் செய்த மகேஷ்குமார், தனது குடும்பத்தினருடன் கோயில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது குழந்தையின் காலில் இருந்த தங்க கொலுசு மாயமாகி இருந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மகேஷ்குமார் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது ஒரு பெண் அவர்களிடம் பேசிக்கொண்டே குழந்தையின் காலில் இருந்த கொலுசை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. குழந்தையைக் கொஞ்சுவது போல கொலுசை அவர் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் போட்டோக்களை அருகே உள்ள காவல் நிலையங்களுக்கு போலீஸார்அனுப்பி வைத்தனர். அவர்களின் தேடுதல் வேட்டையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த கலைவாணி(60) என்பவர் தான் கொலுசை திருடியது தெரிய வந்தது. ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்த கலைவாணி, கபாலீஸ்வரர் கோயிலில் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தங்கக்கொலுசை அவரிடமிருந்து மீட்டு மகேஷ்குமார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட கலைவாணி சிறையில் அடைக்கப்பட்டார். கவுண்டமணி படப்பாணியில் குழந்தையிடம் கொலுசை திருடிய மூதாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.