• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலினுக்கு 85 சதவீத மக்கள் ஆதரவு – கருத்துக் கணிப்பில் தகவல்

ByA.Tamilselvan

May 23, 2022

தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. தமிழகத்தில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது.முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் 85 சதவீத மக்களுக்கு திருப்தி அளித்துள்ளதாக தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த 5 மாநிலங்களின் முதல் வர்களாக பொறுப்பேற்றவர்களின் செயல்பாடுகள் கடந்த ஓராண்டில் எப்படி இருந்தது, என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிஉள்ளது
தமிழக அரசின் செயல்பாடுகளை பொருத்தவரை 30 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மிகவும் திருப்தி அளிப்பதாகவும், 51 சதவீதம் பேர் திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, 81 சதவீதம் பேருக்கு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதேநேரம் 17 சதவீதம் பேர் மாநிலத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் தங்களுக்கு திருப்தி இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதல்வர்களின் செயல்பாடுகளை பொருத்தவரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிக ‘ரேட்டிங்’ பெற்றுள்ளார். கருத்துக் கணிப்பு தரவுகளின்படி, 41 சதவீதம் பேர் முதல்வராக ஸ்டாலினின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவும், 44 சதவீதம் பேர் சில செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 85 சதவீதம் பேர் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளில் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 13 சதவீதம் பேர் அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல, தமிழக எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளை பொருத்தவரை, 35 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும், 10 சதவீதம் பேர் மிகுந்த திருப்தி என்றும், 42 சதவீதம் பேர் திருப்தி என்றும் தெரிவித்துள்ளனர். தமிழக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் போதிய அளவுக்கு இல்லை என்பதே மக்கள் கருத்தாக உள்ளது.