கர்நாடக மாநிலத்தில் திடீரென கத்திரிக்காய் விலை ஏற்றம் கண்டு 100 ரூபாயை கடந்து விற்பனை ஆகி வருவதால் ஹோட்டல்களில் சாப்பாடு மெனுவில் இருந்து கத்திரிக்காய் உணவு வகைகள் நீக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் சமீப நாட்களாக கத்திரிக்காயின் விலை கணிசமாக அதிகரித்து வந்தது. மொத்த விலை மார்க்கெட்டில் கத்திரிக்காய் விலை கடுமையாக அதிகரித்து ஒரு கிலோ 100 ரூபாயை கடந்துள்ளது.
இதனால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஹோட்டல் நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கத்திரிக்காய் மட்டுமின்றி முட்டைக் கோஸ் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
விண்ணை முட்டும் வகையில் கத்திரிக்காய் விலை உயர்ந்துள்ளதை அடுத்து இல்லத்தரசிகளின் காய்கறி பட்ஜெட்டில் பெரிய அடி விழுந்துள்ளது. மேலும் விலை உயர்வால் கத்திரிக்காய் வாங்க வருவோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக மொத்த விலை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, ஹூப்பள்ளியில் உள்ள பல உணவகங்கள் தங்கள் மதிய உணவு மெனுவில் இருந்து கத்திரிக்காய் உணவு வகைகளை நீக்கி உள்ளன.
இதுகுறித்து உணவகங்களுக்கு காய்கறி சப்ளை செய்யும் மொத்த விலை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘மழைக்காலம் முடிந்தும் மழை தொடர்ந்து வருவதால் கத்திரிக்காய் சாகுபடி பாதித்துள்ளது. இதன் காரணமாக கத்திரிக்காய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. டிசம்பர் 24 முதல் 27 வரை கத்திரிக்காய் விலை கிலோவுக்கு 200 முதல் 220 ரூபாய் வரை எகிறியது. இருப்பினும் தற்போது 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
இந்த மாதம் நிறைய திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போதிலும் கத்திரிக்காயை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயங்குகின்றனர். ஒரு சில பெரிய ஹோட்டல்கள் தவிர்த்து பல ஹோட்டல்களில் கத்திரிக்காய் டிஷ்கள் பறிமாறப்படுவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.