

திருச்செங்கோட்டில் அரசு செலவில் கட்டப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்யுங்கள்.
திருச்செங்கோடு ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தார் அட்மா க தலைவர் தங்கவேல் மாவட்ட ஊராட்சி குழு 5-ஆவது வார்டு உறுப்பினர் அருள்செல்வி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜவேல் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தா உதவிப் பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூட்டத்தில் கலந்து கொண்டார் திருச்செங்கோடு ஒன்றியக் குழு கூட்டம் 40 லட்சம் மதிப்பில் தேவனாங் குறிச்சி, கருவேப்பம்பட்டி, ஆனங்கூர் ஓ.ராஜாபாளையம் உள்ளிட்ட 4 ஊராட்சி பகுதிகளில் ரூ 40 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, திருச்செங்கோட்டில் அரசு கலை கல்லூரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கும் அதற்கான ஏற்பாடுகளை செய்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது..,
அரசு செலவில் கட்டப்படும் கட்டிடங்கள் தரமாக கட்டப்படுகிறதா என ஒன்றிய கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒப்படைக்கப்படும் தருவாயில் டேங்குகள் பள்ளிக் கட்டிடங்கள் ஒழுகுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்குள் பணிகளை ஆய்வு செய்யுங்கள் என ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஒன்றிய பகுதிகளுக்கு ஆய்வுக்கு வரும் போது ஊராட்சி தலைவர்களுக்கு தகவல் கொடுப்பது போல் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும் இனி தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
