• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி : தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு

Byவிஷா

Apr 24, 2025

ஜம்முகாஷ்மீரில் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் யாராவது சுற்றித் திரிகிறார்களா, ரயில் நிலையத்தில் மர்ம பொருட்கள் ஏதாவது கிடக்கிறதா எனவும் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து விதமான வழிபாட்டு தலங்களைச் சுற்றிலும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், தங்கும் விடுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் விடுதி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள விமானம், பேருந்து, ரயில் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களிலும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை போலீஸார் அதிகரித்துள்ளனர்.
அதோடு மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களில் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக வன்முறையை துண்டும் வகையில் யாராவது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்களா என சைபர் க்ரைம் போலீஸாரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதேபோல், சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி, ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.