• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிஆர்பி ராஜா இன்: பிடிஆர் அவுட் – திமுக ஐடி விங்கில் அதிரடி

தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படுவதற்கு முன்னே பெரிதும் பேசப்பட்டவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டவர். சுமார் ரூ.5 லட்சம் கோடியை கிட்டத்தட்ட எட்டி கடனில் சிக்கி தமிழகம் தவித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் அந்த துறை குறித்த அனுபவம் உள்ள மிகப் பொருத்தமான நபரான பிடிஆரை தேர்வு செய்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் குவிந்தன.

பிடிஆர் சார்ந்த நிதித்துறை ரீதியான செயல்பாட்டில் அவர் எந்தவித விமர்சனங்களும் இதுவரை எழவில்லை என்றாலும் கூட, தொடர்ந்து விமர்சனங்களுக்கு மத்தியிலேயே அவர் பயணித்து வருகிறார். தன்னை பற்றி வரும் எந்த ஒரு விமர்சனத்துக்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் தியாகராஜன் கொஞ்சம் ஓவராகவே பேசுகிறார் என்ற பிம்பத்தை உருவாக்குவதாக கூறுகிறார்கள்.

அரசியலில் விமர்சனங்களைக் கவனித்துக் கடந்துவிட வேண்டுமே தவிர அவற்றிற்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பிடிஅர், தனது முன் கோபத்தையும் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற குணத்தையும் விட்டு விட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அவருக்கு விடுக்கப்பட்டு வந்தன.

பிடிஆரின் இந்த பேச்சுகள் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், அவரை அழைத்த ஸ்டாலின் துறைரீதியான செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்; உங்கள் அனுபவமும், திறமையும் முழுதாக வெளிப்பட்டு மாநிலத்தின் நிதி நிலைமை விரைவில் மாற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அண்மைக்காலமாகவே பிடிஆர் சைலண்டாகவே இருக்கிறார்.

இதனிடையே, பிடிஆர் கட்சியில் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. எந்த அணிக்கும் ஆலோசகர் இல்லாத நிலையில், ஐடி விங்குக்கு ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரனை கொண்டு வந்தது, மநீமவிலிருந்து வந்த மகேந்திரனை ஐடி விங் இணைச் செயலாளராக்கியது உள்ளிட்ட விவகாரங்களில் பிடிஆருக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஆனாலும், அரசாங்க வேலைகளில் கவனம் செலுத்துவதற்காகவே தனது பதவியை பிடிஆர் ராஜினாமா செய்ததாக திமுக தரப்பில் தெரிவித்தனர்.

தொடர்ந்து திமுக ஐடி விங் செயலாளர் பதவியை கைபற்ற பலரும் முனைப்பு காட்டி வந்த நிலையில், திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். 

அரசு பணிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அளித்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா நியமனம் செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, டிஆர்பி ராஜாவின் தந்தையும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டிஆர் பாலு, டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனி நபர் குறித்து பேசமுடியாது என பிடிஆரை நோஸ் கட் செய்யும் விதமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.